கோலாலம்பூர், ஜூன்.01-
மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்வார் தமது பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் இறைவனின் அருள், பாதுகாப்புடன் வாழ பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாமன்னர், நீதி, ஞானம் மற்றும் விவேகத்துடன் நாட்டை வழிநடத்தி, கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் உயரிய பதவியைச் சிறப்பாக வகிக்க வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், இஸ்லாமிய மதத்தின் பாதுகாவலராகவும், நாட்டின் பல்லின மக்களுக்கிடையேயான ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வின் அடையாளமாகவும் முடியாட்சி தொடர்ந்து திகழ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தாமும், மலேசிய மக்களும் அரசியலமைப்பு முடியாட்சியின் மீது அசைக்க முடியாத விசுவாசத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவோம் என்றும், மாமன்னர் நீடூழி வாழ்க என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








