ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.15-
சுற்றுப் பயணிகளை இலக்காகக் கொண்டு, மாந்திரீகம் மூலம் அவர்களை மதிமயக்கி, பணத்தைக் கொள்ளையிட்டு வந்ததாக நம்பப்படும் 5 ஈரான் பிரஜைகள், இன்று ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு மலாய், ஆங்கில மொழி பேசவும், விளங்கிக் கொள்ளவும் இயலாது என்பதால் குற்றச்சாட்டின் தன்மைகளைப் புரிந்து கொள்ள முடியாது என்று ஐந்து ஈரான் பிரஜைகளும் ஒரு சேர நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஈரானில் பரவலாகப் பேசப்படும் பாரசீக மொழிப் பெயர்ப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் வழக்கை ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
19 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து ஈரான் பிரஜைகளும் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி தைவான், நெதர்லாந்து, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப் பயணிகளிடம் கொள்ளையிட்டதாகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








