கோலாலம்பூர், டிசம்பர்.04-
சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்காக கோத்தா பாரு எம்.பி.யும். எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற கொறடாவான தக்கியுடின் ஹசானை இடை நீக்கம் செய்வதற்கு முன்மொழியப்பட்ட தீர்மானத்தை மக்களவை இன்று ஒத்திவைத்துள்ளது.
தக்கியுடின் ஹசானுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் குறித்து முடிவு செய்யப்படுவதற்கு முன்னதாக ஆளும் கட்சி, மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கருத்துகளைக் கண்டறிவதற்கு ஏதுவாக தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று உள்துறை துணை அமைச்சர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
மக்களவையில் 2026-ஆம் ஆண்டுக்கான விநியோக மசோதா மீதான விவாதத்தின் போது மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் ஒரு பயிற்சி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதற்காக பாஸ் கட்சியின் பொதுச் செயலாளரான தக்கியுடின் ஹசானுக்கு எதிராக இந்தத் தீர்மானம் முன்மொழியப்பபட்டது.
திரெங்கானு, மாராங்கில் மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் ஒரு பயிற்சியுடன், கடந்த 1985 ஆம் ஆண்டு கெடாவில் நிகழ்ந்த Memali ரத்தக் களறி சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி தக்கியுடின் ஹசான் பேசியது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று ஆளும் கட்சி எம்.பி.க்கள் வாதிட்டனர்.








