அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மதானி அரசாங்கம் காட்டி வரும் உறுதியான அர்ப்பணிப்பைக் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் இன்று வெகுவாகப் பாராட்டியுள்ளார். எந்தவொரு சமூகத்தையும் ஒதுக்கிவிடாமல், ஒட்டுமொத்த மலேசியர்களின் கல்வித் தரத்தையும் உயர்த்துவதற்கான கொள்கைகளை அமல்படுத்துவதில் நம் அரசாங்கமும் பிரதமரும் மிகச்சிறந்த துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர் என்று புதிய எஸ்.ஜே.கே.(சி) ஹெங் ஈ பள்ளி கட்டடக் கட்டுமானத்திற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கும் விழாவில் அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
இனம், மதம் அல்லது பின்னணி என எவ்விதப் பாகுபாடும் இன்றி, அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் கல்வி முறையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக எஸ்.பி.எம். தேர்வில் 10ஏ-கள் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் பிரிவில் இடம் கிடைப்பது நிச்சயம் என்ற முக்கியமான முடிவை இந்த விழாவில் தெரிவித்தார்.
தேசியக் கல்விக் கொள்கையை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்படும் இத்தகைய உள்ளடக்கிய திட்டங்களுக்குப் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும், தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார். மேலும், கல்வி அமைச்சை வலுப்படுத்தும் அடுத்தகட்ட நடவடிக்கையாக, அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று அடுத்த ஆண்டு , முதலாம் ஆண்டு மற்றும் படிவம் ஒன்று மாணவர்களுக்கான '2027 புதிய பாடத்திட்டம்' முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.
இந்த புதிய பாடத்திட்டமானது மாணவர்களின் கல்விச் சிறப்போடு சேர்த்து, அவர்களின் சிறந்த குணநலன், பிறர் மீதான அன்பு மற்றும் நேர்மை ஆகியவற்றை வளர்ப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்று அமைச்சர் ஃபத்லினா சிடெக் மேலும் விவரித்தார்.








