Jun 13, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சிகளின் சதியை பல்லின மக்கள் ஒற்றுமையால் முறியடிப்போம்: ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் அதிரடி முழக்கம்
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் சதியை பல்லின மக்கள் ஒற்றுமையால் முறியடிப்போம்: ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் அதிரடி முழக்கம்

Share:

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் அசைக்க முடியாத ஒற்றுமையே இந்தத் தேர்தலில் நமது வெற்றியைத் தீர்மானிக்கும் என்று ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ அதிரடியாக முழுங்கியுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எப்போதும் மக்களின் உரிமைகளுக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் பாடுபடும் கூட்டணியாகும். மலேசியாவில் ஒரு நிலையான, நேர்மையான அரசியல் சூழலை உருவாக்க நாம் நெகிரி செம்பிலானில் இருந்து தொடங்க வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சரான கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி, அம்மாநிலத்திற்கான தேர்தல் கேந்திரம், நேற்று சிரம்பான் கரிஸ்மா அரினா அரங்கில் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் முரசொலி எழுப்பி தொடக்கி வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் கோபிந்த் சிங் இதனை தெரிவித்தார்.

"மக்களை இனரீதியாகவும் மதரீதியாகவும் பிரித்து, அதில் குளிர்காய எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன. அவர்களின் இந்த வஞ்சக எண்ணத்தை நமது பல்லின மக்களின் அசைக்க முடியாத ஒற்றுமையைக் கொண்டு இரும்புக்கரம் கொண்டு முறியடிப்போம்! நமது தேர்தல் இயந்திரங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, பக்காத்தான் ஹராப்பானின் சாதனைகளை டிஜிட்டல் தளங்களிலும் களத்திலும் ஒவ்வொரு வீடாகக் கொண்டு சேர்க்க வேண்டும். மக்கள் சக்தி நம் பக்கமே உள்ளது, வெற்றி நமதே!" என்று கோபிந்த் சிங் அதிரடியாக முழங்கினார். அவரது இந்த எழுச்சிமிகு பேச்சைக் கேட்டு அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், "போலே" என விண்ணதிர முழக்கமிட்டது ஒட்டுமொத்த அரங்கையும் அதிரச் செய்தது.

இந்தப் பேரணியில் உரையாற்றிய ஜசெக.வின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்குத் துரோகம் இழைக்க நினைத்தவர்களுக்கு இந்தத் தேர்தல் தகுந்த பாடம் புகட்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அமினுடின் ஹரூண் தலைமையிலான பக்காத்தான் அரசு, நெகிரி செம்பிலானில் எந்தவொரு பாகுபாடுமின்றி அனைத்து இன மக்களுக்கும் நேர்மையான முறையில் சிறந்த சேவையாற்றியுள்ளது. ஆனால், சிலரின் சுயநல அரசியல் சூழ்ச்சிகளால் மட்டுமே இன்று இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது.

துரோகத்தையும், பழிவாங்கும் வஞ்சக அரசியலையும் நெகிரி செம்பிலான் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை இத்தேர்தல் களம் மூலமாக நிரூபிக்க வேண்டிய தருணம் இது. ஜசெக எப்போதும் அமினுடின் ஹரூணின் தலைமைக்கு அசைக்க முடியாத முழு ஆதரவை வழங்கும். நமது பலத்தை மீண்டும் நிரூபித்து, நெகிரி செம்பிலானில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை இன்னும் கூடுதல் பெரும்பான்மையோடு சிம்மாசனத்தில் அமர்த்துவோம்! குறிப்பாக, மாநிலத்தில் அனைத்து 11 தொகுதிகளையும் ஜசெக மீண்டும் தற்காத்து, இரும்புக்கோட்டையாக நிலைநிறுத்துவது உறுதி!" என்று அந்தோணி லோக் பேரிரைச்சலுடன் சூளுரைத்தார் .

இந்தத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களம் அல்ல, இது துரோகத்திற்கும் நேர்மைக்கும் இடையே நடக்கும் தர்ம யுத்தம் என்று பிகேஆர் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் முழுங்கினார்.

மக்கள் வழங்கிய ஜனநாயக அங்கீகாரத்தைக் குலைக்க முயன்றவர்கள் அம்பலப்பட்டு நிற்கிறார்கள். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களும், அமினுடின் ஹரூணின் மாநில அரசின் திட்டங்களும் இணைந்து செயல்பட்டதால் நெகிரி செம்பிலான் மாநிலம் பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த முயற்சியை முடக்க நினைக்கும் சக்திகளை மக்கள் சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும் என்று சைபுடின் முழங்கினார்.

பக்காத்தான் கூட்டணியின் ஒற்றுமையே நமது ஆயுதம். அனைத்துத் தொகுதிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் இப்போதே தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி, துரோகிகளை வீழ்த்தி இம்மாநிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என வாக்காளர்களை சைபுடின் கேட்டுக்கொண்டார்.

Related News