நாடெங்கிலும் உள்ள கிராமப்புறங்களில் துணைகோள் இலாக்காவின் இலவசச் சட்ட உதவித் துறையின் செயற்கைக்கோள் அலுவலகங்களை விரிவுபடுத்துவதற்காக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீட்டைக் கோர உள்ளதாகச் சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர்துறை அமைச்சர் அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்களின் சட்டப் பாதுகாப்பு மற்றும் உதவிக்கான உரிமைகளை எளிதாகப் பெற முடியும் என்று கோத்தா திங்கி - பெங்கேராங் நீதிமன்ற வளாகத்தில் புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவிற்குப் பின் அவர் இதனை குறிப்பிட்டார்.
சபா, சரவாக் உள்ளிட்ட கிராமப் புறங்களைச் சென்றடைய 'நடமாடும் நீதித்துறை திட்டத்தின் கீழ்' வேன் சேவைகளும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் அசாலினா ஒத்மான், மக்கள் எங்குச் சென்று உதவி பெற வேண்டும் என்று தெரியாவிட்டால் சட்டத் திருத்தங்களால் பயனேதும் இல்லை என்றும், எதிர்க்கட்சித் தொகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் இந்தச் சேவை வழங்கப்பட வேண்டும் என்றும் இத்துறையின் தலைமை இயக்குநருக்கு அமைச்சர் அசாலினா உத்தரவிட்டுள்ளார்.








