கோலாலம்பூர், அக்டோபர்.26-
ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் முறையான கல்வித் தகுதி இல்லாத போதும், மதிப்புமிக்க வேலை அனுபவத்துடன் வேலைக்குச் செல்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் எஸ்பிஎம் முடித்தவர்களில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் உயர் கல்விக்குச் செல்லாத நிலையில், அனுபவம் மிக்க இந்தப் பணியாளர்கள் முறையான தகுதி இல்லாததால் வளர்ச்சியடையத் தடுமாறுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, உயர்க்கல்வி அமைச்சின் APEL எனப்படும் முந்தைய கற்றல் அடிப்படையிலான அங்கீகாரத் திட்டம், வேலையில் உள்ளவர்களுக்கு ஓர் இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறது என FMT செய்தி வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பணியாளர்கள் தங்கள் பணியின் அடிப்படையிலும் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையிலும் நேரடியாக டிப்ளோமா, இளங்கலை அல்லது முதுகலை படிப்பில் சேரலாம் அல்லது முழுமையான கல்வித் தகுதியைப் பெறலாம். இதன் மூலம், தொழிலாளர்கள் தங்கள் அனுபவத்திற்கு முறையான அங்கீகாரம் பெறுவதோடு, தங்கள் வாழ்க்கைத் தரத்தையும் ஊதியத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று துணை அமைச்சர் முஸ்தபா சாக்மூட் தெரிவித்தார்.








