ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தனது முன்னாள் கணவரைக் கைது செய்யத் தவறியதாகவும், கடத்தப்பட்ட தனது மகளைக் கண்டுபிடிக்கத் தவறியதாகவும் காவல்துறை மீது குற்றம் சாட்டி, நீதிமன்ற அவமதிப்புக்காக தேசிய காவல்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி எம் இந்திரா காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமது மகள் பிரசன்னா தீக்ஷாவைக் கண்டுபிடிக்குமாறும், முன்னாள் கணவர் முகமது ரிதுவான் அப்துல்லாவைக் கைது செய்யுமாறும் ஈப்போ உயர் நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதனைச் சுட்டிக் காட்டிய இந்திராவின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன், பல ஆண்டுகள் ஆகியும், நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறினார்.
தங்கள் கடமைகளைச் செய்வதில் காவல்துறையின் அலட்சியமான அணுகுமுறை இந்திராவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறியதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவேதான் அவர்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என ராஜேஷ் தெரிவித்தார்.
இதனிடையே, பிரசன்னாவுடன் மீண்டும் இணைவதற்கான இந்திராவின் சட்டப் போராட்டம், அடுத்த மாதம் அவ்விளம் பெண்ணுக்கு 18 வயது ஆகும் போது முடிவுக்கு வரவிருக்கிறது.
அதன் பின், தனது முன்னாள் கணவரால் கடத்தப்பட்ட போது வெறும் 11 மாதக் குழந்தையாக இருந்த தன் மகளைத் திருப்பித் தருமாறு அதிகாரிகளைக் கட்டாயப்படுத்த, 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் கீழ் உள்ள சட்டரீதியான வாய்ப்பை இந்திரா இழந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திராவின் சம்மதம் இல்லாமல், ரிதுவான் தன்னிச்சையாக அவர்களது மூன்று குழந்தைகளையும் இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதை எதிர்த்து இந்திரா 2009 ஆம் ஆண்டு சட்ட ரீதியான வழக்கைப் பதிவு செய்திருந்தார்.








