மலாக்கா, ஆகஸ்ட்.19-
மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், கிளாங் பள்ளத்தாக்கு மற்றும் மலாக்காவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் சுமார் 4.16 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை 4.15 மணி முதல் மாலை 6.10 மணி வரை நடந்த சோதனையில் 25 முதல் 45 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
கோலாலம்பூரின் புக்கிட் ஜாலில் பகுதியில் உள்ள ஒரு காண்டோமினியத்தின் வளாகத்தில் நடந்த முதல் சோதனையில், போலீசார் ஓர் உள்ளூர் நபரையும் ஒரு பாகிஸ்தானியரையும் கைது செய்தனர். சந்தேக நபரின் உடல் மற்றும் காரைச் சோதனை செய்ததில் 26.73 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், உள்ளூர்வாசியான மூன்றாவது சந்தேக நபர், மலாக்காவின் ஆயர் மோலேக்கில் கைது செய்யப்பட்டார். அவரின் காரிலிருந்து 18.25 கிலோ எடை கொண்ட ஹெராயின் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக டத்தோ ஹுசேன் தெரிவித்தார்.








