கோலாலம்பூர், ஆகஸ்ட்.09-
முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மரணம் தொடர்பில் அவரின் உடல், மயானப் புதைக் குழியிலிருந்து மீண்டும் தோண்டி எடுக்கப்படுவதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு நடைமுறையை அரச மலேசிய போலீஸ் படை உடனடியாக அமல்படுத்தும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டம், செக்ஷன் 331 மற்றும் செக்ஷன் 335 ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த மாணவியின் உடல் தோண்டி எடுக்கப்படும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டத்தோ குமார் குறிப்பிட்டார்.
மாணவியின் மரணம் தொடர்பான புலன் விசாரணை அறிக்கையைச் சட்டத்துறை அலுவலகம் விரிவாக ஆராய்ந்து, மதிப்பீடு செய்த பின்னர் மாணவியின் உடலைத் தோண்டி எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோ குமார் தெரிவித்தார்.
அந்த அறிக்கையின் மதிப்பீட்டு முடிவுகளின்படி, விசாரணையை முறைப்படுத்துவதற்கு தேவைப்படக்கூடிய தகவல்கள் மற்றும் ஆதாரங்களைப் பெறுவதற்கு அந்த மாணவியின் உடல் தோண்டி எடுக்கப்படும் இந்த நடைமுறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டாார்.
சபா, பாபார், லிமாவான், துன் டத்து முஸ்தபா, சமய தேசிய இடைநிலைப்பள்ளியின் முதலாம் படிவ மாணவியான 13 வயது ஸாரா கைரினா மகாதீர், கடந்த ஜுலை 16 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் தாம் தங்கியிருந்த பள்ளி ஹாஸ்டலின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
கடுமையானக் காயங்களுடன் கோத்தா கினபாலு, குயின் எலிஸபெத் 1,மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஸாரா கைரினா மறுநாள் மரணமுற்றார்.
அந்த மாணவியின் உடல், பிரேதச் சோதனைக்கு உட்படுத்தப்படாது, விசாரணை முழுமையாக நடத்தப்படாதது குறித்து அதிருப்தி அடைந்துள்ள மாணவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.








