2018 ஆம் ஆண்டு 14 ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி தோல்வியடைந்த சில நாட்களில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் இல்லத்திலிருந்து ஏராளமான பைகளும், ஆரஞ்சு நிறப் பெட்டிகளும் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டதை போலீஸார் கண்காணித்ததாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முன்னாள் வர்ததக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ அமார் சிங் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில்இன்று சாட்சியம் அளித்தார்.
லெபனான் நாட்டு நிறுவனமான 'குளோபல் ராயல்டி டிரேடிங் சால்', நஜீப்பின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியாகப் பங்கேற்ற அமார் சிங் நீதிமன்றத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
• 2018 ஆம் ஆண்டு மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், சுமார் 23 நபர்கள் அரசு வாகனங்களைப் பயன்படுத்தி இந்தப் பொருட்களை நஜீப்பின் 'பெவிலியன் ரெசிடென்ஸ்' கட்டடத்தில் உள்ள 45-வது யூனிட்டிற்கு மாற்றியுள்ளனர். இது சிசிடிவி பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமார் சிங் குறிப்பிட்டார்.
1MDB தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 2018 ஆம் ஆண்டு மே 16 அன்று நஜிப்புடன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மே 17 அதிகாலை பெவிலியன் ரெசிடென்ஸ் 45-வது யூனிட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அந்த குடியிருப்பில் வெளிநாட்டு பண நோட்டுகள் நிறைந்த பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், சொகுசு கைப்பை பெட்டிகளும் அங்கிருந்தன. "பணப்பைகளைத் திறந்தபோது பணம் தரையில் கொட்டும் அளவுக்குச் சரியாக அடுக்கி வைக்கப்படவில்லை," என்று அமார் சிங் விவரித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் முறையாகக் குமிழி உறையிடப்பட்டு பாதுகாப்பாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக அமார் சிங் உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னாள் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் சக்ரி அரிஃபின் சாட்சியம் அளிக்கையில் , முதலில் நஜிப்பின் மகனுடையது எனத் தற்காலிகமாக நம்பப்பட்ட ஒரு குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அங்கு எதுவும் கிடைக்காததால் பூட்டுத் தொழிலாளி உதவியுடன் 45-வது யூனிட் திறக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த நேரத்தில் அந்த வீடு புதுப்பிக்கும் பணியில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ரோஸ்மா மன்சூரிடம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 14.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 43 ஆபரணங்களைத் திரும்பப் பெறக் கோரி லெபனானை தளமாக கொண்ட குளோபல் ராயல்டி நிறுவனம், ரோஸ்மாவிற்கு எதிராக தொடுத்துள்ள இந்த வழக்கு விசாரணையானது நீதிபதி குவே சூ சூன் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.








