நாட்டின் கல்வி அமைப்பில் நிலவி வரும் "இருப்பதே போதும்" என்ற அலட்சிய மனப்பான்மை, கல்விச் சீர்திருத்தங்களுக்கு தடையாக இருக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் கல்வி முறையில் விரிவான சீர்திருத்தங்களை முன்னெடுத்து, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப கல்வி அமைப்பை மேம்படுத்தும் நோக்கில் தேசிய கல்வி மன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாடத்திட்டம் மற்றும் கல்வி உள்ளடக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், மாணவர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ற கல்வி அமைப்பை உருவாக்குவதே இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், தற்போதுள்ள கல்வி முறையிலேயே திருப்தியடையும் அலட்சிய மனப்பான்மை, முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக் கூடாது என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு மாற்றங்களை ஏற்கும் மனப்பான்மை, சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் துணிச்சல் மற்றும் தொடர்ந்து மேம்படுத்தும் உறுதிப்பாடு அவசியம் என்றும் அவர் விவரித்துள்ளார்.
மேலும், தேசிய கல்வி மன்றம் ஆங்கில மொழித் திறனை இரண்டாம் மொழியாக மேலும் வலுப்படுத்தும் பணியையும் மேற்கொள்ளும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், மலேசியாவின் மதிப்பீடுகள், கலாசாரம், ஒழுக்கநெறிகள் மற்றும் தேசிய மொழியின் முக்கியத்துவம் எந்தவிதத்திலும் புறக்கணிக்கப்படாது என்றும் அன்வார் உறுதியளித்துள்ளார்.








