சிரம்பான், செப்டம்பர்.07-
சிரம்பான், தாமான் ராசா ஜெயா பகுதியில், ஒரு வீட்டில் நடந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வீட்டில் ஒன்றாய் தங்கி இருந்த இரு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஒருவன் ஆத்திரத்தில் தன் நண்பனின் கழுத்தைக் கத்தியால் அறுத்து விட்டுத் தப்பியோடியுள்ளான்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவற்படையினர் உடனடியாக குற்றவாளியைத் தேடும் பணியை முடுக்கி விட்டிருந்தனர். தப்பியோடிய குற்றவாளி, ஒரு விபத்தில் சிக்கியதால் சிகிச்சைக்காக சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அதிகாலை வேளையில் காவற்படை அவரைக் கைது செய்ததாக சிரம்பான் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஹட்டா சே சின் தெரிவித்தார். இந்த விபரீத சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியாத நிலையில், காவற்படையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








