Oct 26, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

தகுதியுள்ள குடியிருப்பாளர்களுக்கு இலவச வீடுகள்

பினாங்கு மாநிலத்தில் பட்டர்வொர்த், உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கும் வகையில், பினாங்கு மாநில வீடமைப்பு வாரியம் (LPNPP) மற்றும் பாரமவுண்ட் பிராப்பர்ட்டி (Paramount Property) நிறுவனத்துக்கு இடையிலான மேம்பாட்டு ஒப்பந்தம் (Development Agreement – DA) கையெழுத்திடும் நிகழ்வு, 25 அக்டோபர் 2026 அன்று தி லைட் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வை பினாங்கு மாநில முதலமைச்சர் மாண்புமிகு சாவ் கொன் இயோவ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் பினாங்கு மாநில முதலமைச்சரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு லிம் குவான் எங், பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சோமு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குமரன் கிருஷ்ணன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சீ யீ கீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், LPNPP தலைமை நிர்வாக அதிகாரி கைருல்னிசாம் ஹஷிம் மற்றும் உஜோங் பத்து பகுதி மக்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

15.87 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இம்மறுமேம்பாட்டுத் திட்டம், உஜோங் பத்து பகுதியின் தற்போதைய குடியிருப்புச் சூழலை மேம்படுத்தி, நவீனமான, பாதுகாப்பான, வசதியான மற்றும் திட்டமிட்ட குடியிருப்புப் பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பினாங்கு மாநில முதலமைச்சர் மாண்புமிகு சாவ் கொன் இயோவ், நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுக்கும் அதேவேளையில், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பது மாநில அரசின் முக்கியப் பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.

மேலும், தகுதியுள்ள குடியிருப்பாளர்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்படுவதுடன், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட வீடமைப்புக் கொள்கையை மாநில அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சமூக வீடமைப்புத் திட்டங்களின் நோக்கம் லாபம் ஈட்டுவது அல்ல; மக்களின் வீடமைப்புத் தேவைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே முதன்மையான இலக்காகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த மறுமேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 350 மலிவு விலை ரூமா முத்தியாராகூ வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள மக்களுக்கு தரமான மற்றும் வசதியான வீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், தற்போதைய வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்ற பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலில் குடியிருப்பாளர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளையும் மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சோமு தெரிவித்தார்.

அதேவேளையில், உஜோங் பத்து பகுதியின் பூர்வீகக் குடியிருப்பாளர்களின் நலன்கள், உரிமைகள் மற்றும் சமூகத் தொடர்புகள் பாதுகாக்கப்படுவதற்கும் மாநில அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. மறுமேம்பாட்டுச் செயல்முறையில் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நலன்களை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் நகர்ப்புற வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், அப்பகுதி மக்களுக்கு சிறந்த குடியிருப்பு வசதிகளையும் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலையும் உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →