மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்கள், வாடகைக் கார் ஓட்டுநர்கள் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் ஒரு முறை சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மலாக்கா சிஎம்ஐ வளாகத்தின் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த உதவியை வழங்கினார். வாகனப் பராமரிப்புச் செலவுகள் உள்ளிட்ட நிதிச் சுமைகளைக் குறைக்கும் நோக்கில், மடானி அரசாங்கத்தின் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சிறப்பு ‘H’ தொடர் வாகனப் பதிவெண்களின் விற்பனை மூலம் கிடைத்த வருவாயிலிருந்து இந்த உதவி நிதி வழங்கப்படுகிறது. நாட்டின் தரைவழிப் போக்குவரத்து சேவையில் முக்கியப் பங்காற்றும் ஓட்டுநர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதுடன், அவர்களின் நலனைப் பாதுகாப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கம் என அந்தோணி லோக் கூறினார்.








