கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் நடைபெறும் தீபாவளி சந்தையை, கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ, கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டத்தோ ஃபாட்லூன் மாக் உஜுட்டுடன் இணைந்து நேற்று இரவு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

வணிகர்களுக்கான உரிமக் கட்டணம் 400 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஹன்னா இயோ, வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வசதிகளை ஏற்படுத்த கோலாலம்பூர் மாநகர் மன்றம் 1.8 மில்லியன் ரிங்கிட் செலவிட்டுள்ளதாகக் கூறினார். பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் தீபாவளி சந்தையில் ஒதுக்கப்பட்டுள்ள கடைகள் வணிகர்களுக்கும் வருகையாளர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளனவா, கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஏற்படுத்திய இந்த வசதிகள் அனைத்தும் முறையாக உள்ளனவா என்பதை நேரில் பார்வையிட்டு உறுதி செய்யவும், தாமும், டத்தோ பண்டாரும் தீபாவளி சந்தைக்கு இவ்வருகையை மேற்கொண்டதாக அமைச்சர் ஹன்னா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே இந்த தீபாவளி சந்தை வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படும் நிலையில், வார இறுதி நாட்களில் அதிகாலை 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சந்தை நடைபெறும் காலம் 21 நாட்களிலிருந்து 30 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று டத்தோ பண்டார் டத்தோ ஃபாட்லூன் மாக் உஜுட் தெரிவித்தார்.








