புத்ராஜெயா, அக்டோபர்.05-
"டிஜிட்டல் யுகத்தில் நூலகங்களின் தேவை குறைந்துவிட்டது" என்ற வாதங்கள் நிலவினாலும், மலேசியாவின் தேசிய ஒற்றுமை அமைச்சு வாசிப்புத் திட்டங்களில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் 56 ஆயிரத்து 473 வாசிப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார். இதற்குச் சான்றாக, அதே ஆண்டில் 800 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேசிய நூலகத்தின் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நூல்கலை வாசிப்பது சலிப்பூட்டும் என்ற இளைய தலைமுறையின் கருத்தை மாற்ற, டிஜிட்டல் தொழில்நுட்பமும் சுவாரஸ்யமான அனுபவங்களையும் இணைத்து நூலகங்களை மாற்றுவதில் அமைச்சு உறுதியாக உள்ளது. வாசிப்புப் பழக்கத்தை வளர்த்து, 2030-ஆம் ஆண்டிற்குள் மலேசியாவை ஒரு வாசிப்பு நாடாக மாற்றுவதே இதன் இறுதி இலக்கு என ஆரோன் மேலும் குறிப்பிட்டார்.








