கோலாலம்பூர், ஜூலை.15-
இலக்கவியல் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கை என்பது நவீன இலக்கவியல் உலகுக்கான முக்கியக் கூறு என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
46-வது ஆசியான் மாநாட்டை மலேசியா ஏற்று நடத்தும் நிலையில், இலக்கவியல் அமைச்சின் கீழ் ஆசியான் 5G மற்றும் செயல்முறை தொழில்நுட்பம் 5GOT பாதுகாப்பு மாநாடு 2025, 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. ஆசியாவிலேயே முதல் முறையாக நடைபெறும் இந்த செயல்முறை தொழில்நுட்ப மாநாட்டை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கை என்பது, நவீன இலக்கவியல் உலகத்தின் அடிப்படைக் கூறு ஆகும். மலேசிய அரசாங்கம், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை இலக்கவியல் தொழில்நுட்பம் நோக்கி நகர்த்தும் நிலையில், இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை மேலோங்கச் செய்வது அவசியமாகும்.
அதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுப்பது தமது கடமை என அமைச்சர் வலியுறுத்தினார். இதற்கு முக்கியத் தூண்களாக விளங்கும் இலக்கவியல் உள்கட்டமைப்பு, திட்ட வரைவு மற்றும் இலக்கவியல் சார்ந்த விழிப்புணர்வுக் கல்வி ஆகியவற்றுக்கு விரிவான அணுகுமுறை தேவை என்று அவர் கூறினார்.
ஆசியான் வட்டார டிஜிட்டல் சேவைகளில், இலக்கவியல் மீதான நம்பிக்கையை மேலோங்கச் செய்யும் அணுகுமுறைகளை வரையறுப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆசியானில் 5G மற்றும் செயல்முறை தொழில்நுட்ப பாதுகாப்புக்கான, பகிரப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை நிறுவ தமதமைச்சு நுண்ணோக்குவதாக அமைச்சர் கோபிந்த் தெரிவித்தார்.








