Jul 15, 2026
Thisaigal NewsYouTube
மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது
தற்போதைய செய்திகள்

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

Share:

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் சுமார் 20 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 3 கிலோ ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தியதாக 24 வயதுடைய மலேசிய ஆடவர் ஒருவர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 20 அன்று தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிலிருந்து மக்காவ் சென்றடைந்த அந்த நபர், தனது பயணப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியேற முயன்றபோது மக்காவ் நீதித்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவரது சோதனையிடப்பட்டப் பயணப்பெட்டிகளில் இருந்த 49 தூனா மீன் பிஸ்கட் பெட்டிகளுக்குள், தூனா மீனுக்கு பதிலாக வெள்ளை நிற ஹெராயின் போதைப்பொருள் தூள் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 2,987 கிராம் எடையுள்ள இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசிய போதைப்பொருள் கடத்தல் கும்பலால் வேலைக்கு அமர்த்தப்பட்ட இந்த இளைஞருக்கு, இக்கடத்தல் வேலை முடிந்ததும் 3,000 ரிங்கிட் சம்பளமாக வழங்க வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மக்காவ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News