கோலாலம்பூர், நவம்பர்.13-
நாட்டின் முக்கிய உல்லாச வாசஸ்தலங்களில் ஒன்றான பகாங், கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணத்தை விதிக்கும் புதிய விதிமுறையை அந்த உல்லாச வாசஸ்தலத்தை நிர்வகித்து வரும் கெந்திங் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் விரைவில் நடைமுறைப்படுத்தவிருக்கிறது.
24 கி.மீ நீளமுள்ள செங்குத்தான சாலை மற்றும் அதன் மலைச்சாரல்களைப் பராமரிப்பதற்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனைச் சமாளிப்பதற்கு அந்த உல்லாச வாசஸ்தலத்திற்குச் சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாகனத்திற்கும் நுழைவுக் கட்டணத்தை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனம் உள்ளது என்று கெந்திங் மலேசியா பெர்ஹாட் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தச் செலவினங்கள் யாவும், வருகையாளர்கள் மீது திணிக்காமல், கடந்த 1960 ஆம் ஆண்டிலிருந்து நிறுவனமே ஏற்று வந்துள்ளது என்று அது குறிப்பிட்டுள்ளது.
மலைப்பாங்கான பகுதியில், கடின நிலப்பரப்பில் கெந்திங் மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தால் தனிப்பட்ட முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலையானது Resorts World Genting – கிற்கும், கெந்திங் மலேசியா பெர்ஹாட்டின் சொத்துக்களுக்கு அப்பால், அந்த மலைப்பாங்கான பகுதியில் உள்ள பிற இடங்களுக்கும் செல்வதற்கான அணுகலையும் வழங்குகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலை, அதிக பயன்பாடும், தேய்மான செலவும் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் வாகனங்களுக்கு இத்தகைய நுழைவுக் கட்டணத்தை விதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.








