ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இத்தள்ளுபடியானது வரும் மார்ச் 18 - ஆம் தேதி அதிகாலை 12.01 மணி முதல் மார்ச் 19 - ஆம் தேதி இரவு 11.59 மணி வரை, மொத்தம் 48 மணி நேரங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக டோல் சலுகை வழங்கும் நிறுவனங்களுக்கு சுமார் 21.03 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தள்ளுபடியானது, Class 1 தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகள், குறிப்பாக ஜோகூரில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் மற்றும் தஞ்சோங் குப்பாங் சுங்கச் சாவடிகளில் இச்சலுகை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு உதவி தேவைப்படும் 4,000 பேருக்கு, குறிப்பாகத் தனித்து வாழும் பெற்றோருக்கு, அவர்களை திவால் நிலையிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தும் வகையில், திவால்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகை காலத்தில் மலேசியர்களின் நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும், கூடுதலான பொதுவிடுமுறை, STR உதவித் தொகையை முன்கூட்டியே வழங்குதல், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பண உதவி போன்ற பிற திட்டங்களுடன் இது இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள், பண்டிகையை சிக்கனமாகவும், பொறுப்புடன் கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களை அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.








