பேராக் மாநிலம் சுங்கை சிப்புட் அருகே கம்போங் பவோங் பகுதியில் உள்ள லத்தா செராய் வனப்பகுதியில் மூங்கில் சேகரிக்கச் சென்ற ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த 65 வயது ஆடவர், புலி தாக்கி உயிரிழந்தார்.
நேற்று நிகழ்ந்த இச்சம்பவத்தை பேராக் மாநில ஊரக வளர்ச்சி, தோட்டத்துறை, விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை தலைவர் டத்தோ முஹமட் ஸுல்கிஃப்லி ஹாருன் உறுதிப்படுத்தியுள்ளார்.
லிந்தாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர், கம்போங் பவோங் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், சம்பவ இடத்துக்குச் செல்வதைத் தவிர்த்து அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், சுங்கை சிப்புட் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களுக்குள் புலி தாக்கிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பது இது இரண்டாவது முறையாகும்.








