பேராக் மாநிலம் கோலா கங்சாரில் உள்ள முழுநேர உறைவிடப் பள்ளியில் மூன்றாம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விரிவான, வெளிப்படையான விசாரணை நடத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று அம்மாணவர் பள்ளி வளாகத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக தமது முகநூல் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள அன்வார், நீதியை நிலைநாட்டவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் விசாரணையில் எந்தவோர் அம்சமும் விடுபடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பேராக் மாநிலக் கல்வித் துறை, இச்சம்பவத்தின் நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும், போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.








