சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், எஸ்எம்இ மற்றும் அதன் மூன்று வியூக சகாக்கள் இணைந்து குறைந்தபட்சம் 90 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டு நிதியை வழங்கவுள்ளன.
எஸ்எம்இ கோர்ப் நிறுவனத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டுத் திட்டம் தொடக்க விழாவில் பேசிய தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனைத் தெரிவித்தார்.

அப்போது, கடந்த 30 ஆண்டுகளாக எஸ்எம்இ கோர்ப் அடைந்துள்ள சாதனைகள் குறித்து பெருமிதம் தெரிவித்த அவர், தற்போது அதன் தலைமைச் செயல்முறை அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள ரிஸால் டத்தோ நைனியின் தலைமையையும் பாராட்டினார்.

இந்த முதலீட்டுத் திட்டத்தின்கீழ் எஸ்எம்இ கோர்ப் 45 மில்லியன் ரிங்கிட்டை வழங்குவதுடன், ஓஎஸ்கே, ஹர்தாமோடல் மற்றும் பெர்னாஸ் ஆகிய மூன்று வியூக சகாக்களின் பங்களிப்புடன் மொத்த நிதி குறைந்தபட்சம் 90 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்.

இதன் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய துறைகளில் செயல்படும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி மற்றும் பங்குமூலதன முதலீடு வழியாக நிதி ஆதரவு வழங்கப்படும் என்றார்.

இதற்கிடையில், எஸ்எம்இ கோர்ப் தனது புதிய அலுவலகத்தை மெனாரா ஏஐஏ கேப் ஸ்குவேருக்கு மாற்றியதன் மூலம் ஆண்டுக்கு 17 மில்லியன் ரிங்கிட்டை செலவைச் சேமிக்க முடியும் என்றும் அமைச்சர் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

மேலும், சிறு, நடுத்தர நிறுவனங்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் நிதி மற்றும் பணப் புழக்கப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஸ்கேல் (SCALE) செயல் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.








