சிலாங்கூர், பாண்டான் ஜெயா எல்.ஆர்.டி. நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் ஆடைகளின்றிக் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 7.30 மணியளவில், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு இது குறித்த தகவல் கிடைத்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் கைருல் அனுவார் காலிட் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுயநினைவின்றிக் கிடந்த அந்த ஆடவரை மீட்டனர். அவரைப் பரிசோதனை செய்த அம்பாங் மருத்துவமனையின் மருத்துவ உதவி அதிகாரி, அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.
தற்போது உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அம்பாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.








