சிலாங்கூர், காப்பார் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பெரிய மருத்துவமனை, அடுத்த ஆண்டு ஜூன் மாதம், முதல் கட்டமாகச் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தெரிவித்த சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட், கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துவமனையில் நிலவும் நோயாளிகள் நெரிசலைக் குறைக்கும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.
831 மில்லியன் ரிங்கிட் செலவில் உருவாகும் இம்மருத்துவமனையில் 312 படுக்கைகள் மற்றும் தொற்றுநோய்கள் உள்ளிட்ட 17 மருத்துவச் சிறப்புப் பிரிவுகள் இடம் பெறும்.
கடந்த அக்டோபர் 20ஆம் தேதி நிலவரப்படி, கட்டுமானப் பணிகள் 96.26 விழுக்காடு நிறைவடைந்துள்ளதுடன், எவ்வித தாமதமுமின்றித் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 3 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கும் காப்பார் வட்டாரத்தில் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், 12 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட கிள்ளான் பகுதியின் சுகாதாரச் சேவைகள் மீதான அழுத்தத்தையும் இம்மருத்துவமனை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








