மனிதவள அமைச்சான கெசுமா (KESUMA) ஏற்பாட்டில் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த குழந்தைகளும் சிறப்பிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கோலாலம்பூர், செந்தூல் தம்புசாமிப்பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும் அன்பு இல்லம், கருணை இல்லம் ஆகிய இரண்டு ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த குழந்தைகள் கலந்து கொண்டனர்.

ஏறக்குறைய மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மற்றும் துணை அமைச்சர் கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு, மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர், சமூகப் பாதுகாப்பு நிறுவனமான பெர்கெசோவின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஶ்ரீ டாக்டர் முஹமட் அஸ்மான் அஸிஸ் முஹமட் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன், பல இன மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்தும் நோக்கில், 'ஒற்றுமை மடானி' என்ற கொள்கையின் அடிப்படையில் மனித வள அமைச்சு முன்னெடுத்து வரும் முயற்சிகளில் தீபாவளி விருந்து உபசரிப்பு நிகழ்வும் ஒன்றாகும் என்றார்.

தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவது வெவ்வேறு கலாசாரங்கள் மற்றும் பாரம்பரியங்களைப் போற்றுவதுடன் நின்றுவிடாமல், வசதி குறைந்த மக்களும் மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்ளும் வகையில், அன்பும் நல்லிணக்கமும் நிறைந்த சூழலை உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது என்றார்.

இதனிடையே, மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா வழங்கும் உயர்வு மடானி மானியத் திட்டத்திற்கு இதுவரை ஏறக்குறைய 8,300 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அதன் தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.

அனைத்து விண்ணப்பங்களும் தற்போது முதற்கட்டத் தகுதிச் சோதனை மற்றும் மதிப்பீட்டுச் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவரவர் விண்ணப்ப முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

"தற்போது விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைத் தொடர்பு கொள்வதற்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது," என்று இம்மானியத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து வினவப்பட்டபோது ரவீந்திரன் நாயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.









