நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் காணாமல் போன 54 மலேசியர்களின் நிலை குறித்து அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி, பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, சேறு மற்றும் பாறைச் சரிவுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் பலரும் காணாமல் போயினர்.
காணாமல் போன மலேசியர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மஸ்ஃபி (MASFIH) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர். மணிவண்ணன், நேற்று இஸ்தானா நெகாராவின் தலைமை அதிகாரி டத்தோ அஸுவான் எஃபெண்டி ஸைராகித்னைனியைச் சந்தித்து குடும்பங்களின் கோரிக்கைகளை முன்வைத்தார்.
காணாமல் போன 54 மலேசியர்களும் நவம்பர் 18ஆம் தேதி நிலவரப்படி அதிகாரப்பூர்வமாகக் காணாமல் போனவர்களாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், நேபாள அதிகாரிகள் வழங்கும் ஆவணங்களை மலேசியச் சட்டத்தின் கீழ் எவ்வாறு அங்கீகரிப்பது என்பது குறித்து தேசியப் பதிவுத்துறையும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகமும் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் குடும்பங்களின் கவலைகளையும் அண்மைய நிலவரங்களையும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு எடுத்துரைப்பதாக இஸ்தானா நெகாரா அதிகாரி உறுதியளித்துள்ளார்.








