நெகிரி செம்பிலான், நீலாய் டோல் சாவடி அருகே தனது 12 வயது மகனை கைவிட்டு சென்றதாக சீன நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர், சிரம்பான் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
45 வயது ஜியாவ் போ என்ற அந்த தந்தை, கடந்த நவம்பர் 9ஆம் தேதி நீலாய் டோல் சாவடி அருகே தனது மகனை கைவிட்டதுடன், உடல் ரீதியான ஆபத்துக்கு உள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம். குணசுந்தரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, 20 ஆயிரம் ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது.
மேலும், அந்த சீனப்பிரஜையின் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், பாதிக்கப்பட்ட சிறுவனை அணுகவோ தொந்தரவு செய்யவோ கூடாது என்றும் நீதிபதி உத்தரவு விட்டார்.
இந்த வழக்கு விசாரணை, தடயவியல் அறிக்கைக்காக டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








