ஜோகூர் மாநிலம், ரெங்கிட், ஜாலான் ஜெயா டிரி பகுதியில் நேற்று இரவு இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 17 வயது சிறுவன் உட்பட இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.
நேற்று இரவு சுமார் 8.01 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஆறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ரெங்கிட் மாவட்ட தீயணைப்பு நிலைய செயல்பாட்டுப் பிரிவுத் தளபதி கைருல் அஸ்மி ஙாட்மான் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் தீப்பிடித்த புரோட்டோன் சாகா பிஎல்எம் காருக்குள் சிக்கியிருந்த 17 வயது சிறுவன் மற்றும் 22 வயது ஆடவரை உயிருடன் மீட்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு காரான புரோட்டோன் வீராவில் பயணம் செய்த 37 மற்றும் 61 வயதுடைய இருவர் காயமடைந்தனர்.
இந்நிலையில், சுமார் 60 விழுக்காடு தீயில் சேதமடைந்த காரில் இருந்து இருவரின் சடலங்களை, வீரர்கள் மீட்டதாகவும் கைருல் அஸ்மி தெரிவித்துள்ளார்.








