ஈப்போ, பெர்ச்சாம், தாமான் பக்காத்தான் பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு இரட்டை மாடி வீடுகள் தீக்கிரையாகின. இதில் ஒரு வீடு 80 விழுக்காடும், மற்ற வீடுகள் 70, 30 மற்றும் 20 விழுக்காடும் சேதமடைந்தன.

லிந்தாசான் பெர்ச்சாம் தீமோர் 2, எண் 37 என்ற முகவரியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேராக் மாநிலத் தலைமையகத்திற்குப் பிற்பகல் அவசர அழைப்பு கிடைத்தது.
இதையடுத்து ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 7 கிலோமீட்டர் பயணித்து நண்பகல் 12.32 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர்.
இந்தத் தீ விபத்தில் நான்கு வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், எண் 37 வீட்டில் 80 விழுக்காடும், எண் 35 வீட்டில் 70 விழுக்காடும், எண் 33 வீட்டில் 20 விழுக்காடும், எண் 39 வீட்டில் 30 விழுக்காடும் தீயினால் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஒருவரான சந்தனமேரி சூசை கூறுகையில், சம்பவம் நிகழும் போது, தமது சகோதரியின் வீட்டில் இருந்ததாகவும் அண்டை வீட்டுக்காரர் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு தமக்கு தகவல் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
கடந்த 37 ஆண்டு காலமாக இந்த வீட்டில் தங்கியிருந்ததாகவும், இந்த தீ விபத்தில் தங்களின் முக்கியப் பத்திரங்கள் அனைத்தையும் இழந்து விட்டதாக சாந்தினி முருகன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் தமது தாயார் மயக்கமுற்றதாகவும், தீயணைப்பு படையினர் துரித வேகத்தில் வந்து தீயை அனைத்து கட்டுப்படுத்தியதாகவும் சாந்தினி முருகன் குறிப்பிட்டார்.
தீயணைப்பு நடவடிக்கைக்கு வான் முஹமட் ஃபாட்ஸில் வான் ஹம்ஸா தலைமை தாங்கினார். ஈப்போ, தம்புன், மேரு ராயா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்களுடன் பெர்ச்சாம் மற்றும் பெக்கான் பாரு தன்னார்வ தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.








