ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஜாலான் ஹாஜி மானான் பகுதியில், முதியோர் இல்லம் ஒன்றை திடீர் வெள்ளம் சூழ்ந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த 16 முதியவர்கள் தீயணைப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
65 முதல் 85 வயதுக்குட்பட்ட 14 ஆண்களும் இரண்டு பெண்களும் இதில் அடங்குவர். சுமார் இரண்டு அடி உயரத்துக்கு வெள்ளநீர் புகுந்ததால், 12 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்ட அனைவரும் யாப் தாவ் சா பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றுக்கு மாற்றப்பட்டதாக குளுவாங் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நடவடிக்கைப் பிரிவு அதிகாரி சைஃபுல் ஃபாட்லி அப்துல் காரிம் தெரிவித்தார்.
கனமழையே வெள்ளத்திற்குக் காரணம் என்றும், மாலை 5.02 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்டு, மாலை 5.31 மணிக்குள் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள நிலவரத்தைத் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.








