கோலாலம்பூரின் கெப்போங் பகுதியில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி பாராங் ஆயுதத்தால் தாக்கப்பட்டு வலது கை துண்டிக்கப்பட்ட போலீஸ்காரர், தற்போது விரல்களில் ஓரளவு உணர்வைப் பெறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 வயதான லான்ஸ் கார்ப்பரல் தியெரி ரோட்கர் பெண்டிக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் கை மீண்டும் இணைக்கப்பட்டது.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், தற்போது பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.
அந்த போலீஸ்காரருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் ஏலன் ரவி ராஜகோபால் அளித்த விளக்கத்தை தொடர்ந்து இத்தகவலை நூர் ஹிஷாம் இத்தகவலை வெளியிட்டார்.
நரம்புகள் மற்றும் எலும்புகள் குணமடைய மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவைப்படும் என்றும், அதன் பின்னரே அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவது குறித்து மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், போலீஸ்காரர் சுயநினைவுடன் இருப்பதுடன், பேசும் திறனுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








