கோலாலம்பூர் சௌகிட் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது, சுமார் 24 வழிப்பறிச் சம்பவங்களில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதம் ஏந்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்து கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாடில் மார்சுஸ் வெளியிட்டுள்ள தகவலில், உளவுத்துறை தகவலின் அடிப்படையில், கோலாலம்பூர் போலீஸ் மற்றும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையினர் இணைந்து, சௌகிட் பகுதியில் உள்ள தங்கும் விடுதி அறையில் பதுங்கியிருந்த சந்தேக நபரைப் பிடிக்க சோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது அந்த நபர் போலீசாரை நோக்கிப் பலமுறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து, தற்காப்புக்காக போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில் காயமடைந்த சந்தேக நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில் அவர் மலேசியர் என்றும், அவரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் 392 மற்றும் 397 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுதம் ஏந்திய கொள்ளை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகின்றது.








