முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பு உத்தரவில் கையெழுத்திடுவதற்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹான்னா இயோ முதலில் தயக்கம் காட்டியதாக, வெளியிடப்பட்ட மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் மீது ஏற்படக்கூடிய அரசியல் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, அந்த உத்தரவில் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் கையெழுத்திட வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
ஆனால், கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரி கையெழுத்திடுவது பொருத்தமற்றது என மாமன்னரின் சிறப்புப் பணி அதிகாரி நஸிம் ஆலிம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மன்னிப்பு வாரிய உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த மாமன்னர், அந்தப் பொறுப்பு அமைச்சருக்கு உரியது என்பதால் ஹன்னா இயோ கையெழுத்திட வேண்டும் என முடிவு செய்ததாகக் கூட்டக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.








