சிறையிலிருந்து விடுதலையாகி ஒரு வாரமே ஆன நிலையில், மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 31 வயது ஆடவர், கெடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கைப்பட்டாணி, தாமான் கெம்பாஸ் உத்தாமாவில் உள்ள தொழிற்சாலையின் கதவை உடைத்து, 80,000 மதிப்பிலான வெள்ளை நிற 4WD வாகனத்தைத் திருடியதாக அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
சுங்கை லாலாங் பகுதியில் வாகனத்தைக் கண்டறிந்த போலீசார், அதனை நிறுத்த முயன்றபோது சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து, புக்கிட் செலம்பாவ், தாய் செங் தோட்டப் பகுதியில் நடந்த துரத்தலின்போது, பொதுமக்களின் வாகனத்தையும் போலீஸ் வாகனத்தையும் மோதியதால், அவரைத் தடுத்து நிறுத்த போலீசார் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி பின் அபு ஷா தெரிவித்தார்.
சந்தேக நபர் காயமின்றி கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதிப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே எட்டு குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ள அவர், ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.








