பினாங்கு, பகான் டாலாம், உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கும் வகையில், பினாங்கு மாநில வீடமைப்பு வாரியமான LPNPP மற்றும் பாரமவுண்ட் பிராப்பர்ட்டி (Paramount Property) நிறுவனத்துக்கு இடையிலான மேம்பாட்டு ஒப்பந்தம் (Development Agreement – DA) கையெழுத்திடும் நிகழ்வு, நேற்று முன்தினம் தி லைட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வை பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் பினாங்கு மாநில முதலமைச்சரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சோமு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சீ யீ கீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், LPNPP தலைமை நிர்வாக அதிகாரி கைருல்னிசாம் ஹஷிம் மற்றும் உஜோங் பத்து பகுதி மக்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
15.87 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இம்மறுமேம்பாட்டுத் திட்டம், உஜோங் பத்து பகுதியின் தற்போதைய குடியிருப்புச் சூழலை மேம்படுத்தி, நவீனமான, பாதுகாப்பான, வசதியான மற்றும் திட்டமிட்ட குடியிருப்புப் பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பினாங்கு மாநில அரசின் வீடமைப்புத் திட்டங்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு விவரித்தார்.
முன்னதாக இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ், நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுக்கும் அதேவேளையில், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பது மாநில அரசின் முக்கியப் பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.








