கோலாலம்பூர், நவம்பர்.14-
வட கிழக்கு பருவ மழை நேற்று வியாழக்கிழமை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மலேசிய இராணுவப் படை உட்பட அனைத்து அரசாங்க ஏஜென்சிகளின் வெள்ள தேர்தல் கேந்திரங்களின் ஆயத்த நிலை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
இது தொடர்பான அறிக்கை ஒன்றை துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
நாடு, La Nina கால நிலையையும் எதிர்கொண்டுள்ள வேளையில் பருவ மழையின் தொடக்கக் கட்டத்திலேயே விரிவான நடவடிக்கைகள் அவசியமாகிறது என்று அவர் தெரிவித்தார்.
இன்றைய நிலவரப்படி, வடிகால் மற்றும் நீர்பாசனத்துறை மூவாயிரத்து 682 பகுதிகள் வெள்ள அபாயப் பகுதிகளாக அடையாளம் கண்டுள்ளது. அதற்கேற்ப சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஃபாமி இதனைக் குறிப்பிட்டார்.








