புத்ராஜெயா,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மற்றும் பிரிட்டன் இடையிலான வியூக ஒத்துழைப்பு, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் போன்ற அதிக ஆபத்துள்ள துறைகளில் ஊழலை ஒழிப்பதில் கவனம் செலுத்துகிறது. பெரிய அளவிலான பொது நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் என்று எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
புத்ராஜெயா எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் மலேசியாவிற்கான பிரிட்டிஷ் தூதர் அஜய் சர்மாவுடனான சந்திப்பின் போது, தகவல் பரிமாற்றம், பயிற்சி மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், சிறந்த நிர்வாகத்தை நிலைநாட்டவும் உறுதி பூணப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன், அந்தந்த துறைகளின் செயல்பாட்டு முறை மற்றும் கொள்முதல் கட்டமைப்புகளை ஆழமாகப் புரிந்து கொள்வது அவசியம் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார். குறிப்பாக பாதுகாப்புத் துறை போன்ற சிக்கலான துறைகளில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வியூக நலன்களைப் பாதிக்காத வகையில் துல்லியமான மற்றும் தொழில்முறை விசாரணைகளை நடத்துவதற்கு இந்த அணுகுமுறை உதவும் என்று அவர் கூறினார்.
மேலும், புலனாய்வுத் திறனை மேம்படுத்த தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வு முறைகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை அஸாம் பாக்கி இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.








