கோலாலம்பூர், மே.05-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம் அதிகாரிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 'கார்ப்பரேட் மாஃபியா' கும்பல் குறித்த விசாரணை தொடர்பான முன்னேற்றங்கள் குறித்த அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும் என்று டிஜிட்டல் அமைச்சரும், ஜசெக தேசியத் தலைவருமான கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அமைச்சரவை முழு விசாரணைக்கு உத்தரவிட்டு இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில், இதன் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கோபிந்த் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரா என்பதையும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மிரட்டல் மூலமாகவோ அல்லது பிற வழிகளிலோ பங்குகளின் உரிமையை மாற்றும் சந்தை கையாளுதல் முறைகேடுகள் குறித்து பங்குப் பத்திரங்கள் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்க வேண்டும்.
நாட்டின் நிறுவனங்கள் மற்றும் சந்தையின் நேர்மை இதில் அடங்கியுள்ளதால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எவரையும் விட்டு வைக்காமல் சட்டப்படி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோபிந்த் சிங், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வலியுறுத்தினார்.








