சுகாதார அமைச்சின் செயல்பாட்டுச் செலவினங்களை 500 மில்லியன் ரிங்கிட்டாகக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவு, பொதுமக்களுக்கான அத்தியாவசியச் சுகாதாரச் சேவைகள் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்யும் என்று பொதுச் சுகாதார நிபுணர் டாக்டர் ஜைனல் அரிஃபின் உமர் தெரிவித்துள்ளார்.
பயன்படுத்தப்படாத நிதி ஒதுக்கீடுகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளதால், இந்தச் சிக்கன நடவடிக்கை மருத்துவமனை செயல்பாடுகள், மருந்து விநியோகம் மற்றும் பணியாளர் நியமனங்களைப் பாதிக்காது என்று அவர் கூறினார்.
நிதி அமைச்சின் உத்தரவுப்படி இந்த முடக்கம் 500 மில்லியன் ரிங்கிட் மட்டுமே என்றும், பரவிய வதந்திகளைப் போல 3.06 பில்லியன் ரிங்கிட் அல்ல என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், 18,641 புதிய பணியிடங்களுக்கான நியமனங்கள் தொடரும் என்றும், இந்த ஆண்டுக்கான மருந்து ஒதுக்கீடு 6.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.








