கோலாலம்பூர், மே.05-
17 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தியோ பெங் ஹாக் மரணத்தை, கொலை வழக்காக விசாரணை நடத்த, போலீசுக்கு உத்தரவிடக் கோரி, அவரது குடும்பத்தினர் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்து அக்குடும்பத்தினரின் முதன்மை வழக்கறிஞர் ராம்கர்பால் சிங் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கையைத் தொடங்க அனுமதி கோரும் மனுவானது, கடந்த மாதம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தியோவின் மரணத்தைக் கொலை விசாரணை கோணத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கவும், அதற்கான விசாரணையைத் தொடங்கி, 120 நாட்களுக்குள் முடிக்க போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவின் விசாரணை வரும் மே 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், வழக்கு ஆவணங்கள் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கும் அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, தியோவின் மரணம் தொடர்பாக கொலை விசாரணை பதிவுச் செய்யப்பட்டதா? என போலீசிடம் கேட்ட போது, “தவறான சிறைவைப்பு” தொடர்பான குற்றவியல் சட்டம் பிரிவு 342-இன் கீழ் மட்டுமே விசாரணை நடந்ததாக போலீசார் பதிலளித்ததாகவும் ராம்கர்பால் சிங் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இணை வழக்கறிஞர் Lim Wei Jiet கூறுகையில், முன்பு தொடுக்கப்பட்ட தவறான சிறைவைப்பும் விசாரணைக்கு தியோ பெங் ஹாக் மரணத்துடன் நேரடி தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கொலை குற்றத்துடன் ஒப்பிடும்போது அது மிகவும் சிறிய குற்றச்சாட்டு மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2018-க்கு முன்பாக தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பாக சில விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த விசாரணைகள் எந்த கோணத்தில் மேற்கொள்ளப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் லிம் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த Ean Yong Hian Wah-வின் உதவியாளராகப் பணியாற்றிய தியோ பெங் ஹாக், கடந்த 2009 ஜூலை மாதத்தில் சிலாங்கூர் எஸ்பிஆர்எம் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஷா ஆலாம் நகரிலுள்ள பிளாஸா மாசாலாம் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








