பேராக் மாநிலம், ஈப்போவில் தாமான் டேசா தம்பூன் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பில் 5,000 ரிங்கிட் முதற்கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவியை Tambun நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தின் சிறப்பு அதிகாரி முஹமட் ஹைருல் அமீர் சப்ரி, அக்குடும்பத்தாரின் பிரதிநிதியான ராஜா இக்வான் ஹாடி ராஜா அஹ்மாட்டிடம் வழங்கினார்.
மேலும், அவர்களது சுமையை குறைக்கும் வகையில் இந்த முதற்கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், நாளை செப்டம்பர் 21-ஆம் தேதி பிரதமர் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டை ஆய்வு செய்து, பழுதுபார்ப்பு உள்ளிட்ட தேவையான உதவிகள் குறித்து மதிப்பீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இரண்டு மாடி கொண்ட வரிசை வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியரும் அவர்களின் பேரனும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாலை 4 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் கிடைத்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்ய்ஹோ சயானி சைடோன் தெரிவித்துள்ளார்.








