மலேசியாவின் உயரமான கினாபாலு மலையின் அனுமதியற்ற, ஆள்நடமாட்டமற்ற கிழக்குப் பகுதியில் வழிதவறிய குரோஷிய நாட்டைச் சேர்ந்த மலையேறியான மௌரோ பெர்சிச், 9 நாட்கள் உணவு இன்றி உயிருக்கு போராடியதாக தெரிவித்துள்ளார். சுமார் 10 மீட்டர் பள்ளத்தில் விழுந்த அவர், பலவீனமான செல்போன் சிக்னல் மூலம் அவசர சேவையைத் தொடர்பு கொண்டார்.
கனமழையால் பள்ளத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்ட போது, தூங்கும் பை அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பாறையில் பொருத்தப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்தபடி சுமார் 2 மணி நேரம் உயிரைக் காப்பாற்றிக் கொண்டதாக அவர் தமது சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காயங்கள், ரத்தப்போக்கு, தொடர் மழை, ஈக்கள் மற்றும் மாயத் தோற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், மீட்புக் குழுவினரை பார்த்த பிறகும் கைவிடும் நிலைக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 8-வது நாளில் மீட்புக் குழுவினர் அவரை கண்டுபிடித்தனர். கயிறுகள் மற்றும் ஸ்ட்ரெச்சர் உதவியுடன் நாள் முழுவதும் நடந்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி அவர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டார்.
விலா எலும்புகள் முறிவு மற்றும் காலில் காயம் ஏற்பட்டதற்காக சிகிச்சை பெற்று செப்டம்பர் 18-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பெர்சிச்சுக்கு அனுமதியின்றி மலையில் நுழைந்ததற்காக 25 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.








