முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக், தமக்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்த உதவ முன்வரும் மலேசியர்கள், அதற்காக தங்களை சிரமப்படுத்திக் கொள்ளவோ, வருத்திக் கொள்ளவோ வேண்டாம் என்று தமது வழக்கறிஞர்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நஜிப் சார்பில் அவரது வழக்கறிஞர்களான Messrs Shafee & Co. வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதியுதவி செய்ய விரும்புவோர் தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலும், தங்களால் முடிந்த அளவிலும் மட்டுமே உதவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய நிபந்தனையுடன் கூடிய மன்னிப்புக்கு நஜிப் தனது நன்றியைத் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
மேலும், அவருக்கு ஆதரவாக நிற்கும் அம்னோ தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நஜிப் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நஜிப்புக்கு உதவ அம்னோ தொடங்கிய, நஜிப் ஆதரவு நிதி திரட்டும் நடவடிக்கை மூலம் 1 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிதி திரட்டும் முயற்சிக்கு இணையத்தில் கலவையான கருத்துகளும் எழுந்துள்ளன.
நஜிப்புக்காக நிதி திரட்டுவதற்கு பதிலாக, பொருளாதார சிரமத்தில் உள்ள மக்களுக்கு இந்தப் பணத்தை பயன்படுத்தலாமே என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பின் அடிப்படையில், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் மீதமுள்ள சிறைத்தண்டனையை வரும் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் அனுபவிக்க நஜிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.








