நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் வகையில், விசாரணை முடிவடையாமல் சிறையில் உள்ள பிணைக் கைதிகளை வீட்டுக் காவலில் வைக்கும் சட்டமானது அமைச்சரவையில் முன்மொழியப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் புதியது அல்ல என்றும், சிறை நெரிசலைக் குறைத்து நாட்டின் சீர்திருத்த நிர்வாகத்தை மேம்படுத்தும் முயற்சியாக கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே தாம் இதனை முன்மொழிந்ததாகவும் அவர் தமது முகநூலில் வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.
மேலும் தகுதியுடைய பிணைக் கைதிகளை நீதிமன்றம் பரிசீலித்து, விசாரணை முடியும் வரை மின்னணு கண்காணிப்பு சாதனங்களுடன் வீட்டில் தங்க அனுமதிக்கலாம் என்றும், கடுமையான குற்ற வழக்குகள் இந்த நடைமுறையில் இருந்து விலக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடெங்கிலும் 41 சிறைகளில் சுமார் 93 ஆயிரம் பேர் உள்ள நிலையில், அவற்றின் மொத்த கொள்ளளவு 75 ஆயிரம் பேர் மட்டுமே எனக் குறிப்பிட்ட சைஃபுடின், வீட்டுக் காவல் சட்டத்தை உருவாக்குவதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும், அடுத்தகட்டமாக இதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.








