புத்ரா ஜெயாவில் 14 வாகனங்களை மோதித் தள்ளி, இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியது, எழுவருக்கு கடும் காயங்களை விளைவித்தது தொடர்பில் டிரெய்லர் லோரி ஓட்டுநர் ஒருவர் வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 29 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து குற்றவியல் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மாதி அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி புத்ராஜெயா, பூச்சோங்கை நோக்கி ஜாலான் பெர்சியாரான் உதாரா, சாலையின் 5.7 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் வேகக்கட்டுபாட்டை இழந்த டிரெய்லர் லோரி, சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்றிருந்த 14 வாகனங்களை மோதித் தள்ளியத்தில் 26 மற்றும் 39 வயதுடைய இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். நின்றிருந்த இதர வாகனங்கள் கடுமையாக சேதமுற்றதுடன் எழுவர் படுகாயம் அடைந்தனர்.








