மலேசிய விமானப் படையின் விமானங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் துரோகிகள் மீது எந்தவிதமான கருணையும் காட்டப்படாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பினாங்கிலுள்ள ஐகோனிக் மார்ஜோரி தங்கும் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்லிஸ் செமாராக் வாகாஃப் பெர்டானா 2026 நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய அன்வார், அமலாக்க மற்றும் பாதுகாப்புத் துறைகளில் நிலவும் ஊழல், முறைகேடுகளுக்கு எதிராகத் தனது அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளை, ராணுவத்திற்கு எதிரான நடவடிக்கையாகக் கருதக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தனக்கு யார் ஆதரவளிக்கிறார்கள்? யார் எதிர்க்கிறார்கள்? என்பது முக்கியமல்ல என்று குறிப்பிட்ட அவர், விமானப்படைத் தளத்திற்கே நேரடியாகச் சென்று ராணுவத்தினரிடம் இதனை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் மலேசிய இராணுவச் சொத்துகளைப் பயன்படுத்தி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள தரப்பினருடன் இணைந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களே தமக்கு எதிரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து நேரடியாக விளக்கம் அளிப்பதற்காக, இன்று மாலை பட்டர்வொர்த்தில் உள்ள மலேசிய விமானப்படைத் தளத்திற்குச் சென்று ராணுவ வீரர்களைச் சந்திக்கவுள்ளதையும் அன்வார் உறுதிப்படுத்தியுள்ளார்.








