சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோலா சிலாங்கூர் மாவட்ட மக்களுக்கு, வெள்ளத்திற்குப் பிந்தைய மீட்புப் பணிகளுடன் கூடுதல் உதவிகளையும் வழங்குவது குறித்து மாநில அரசு ஆலோசிக்கவுள்ளது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
கம்போங் பாரிட் மஹாங், கம்போங் இஜோக் மற்றும் கம்போங் புக்கிட் ஹிஜாவ் ஆகிய பகுதிகளில் மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னென்ன கூடுதல் உதவிகளை வழங்கலாம் என்பது குறித்து வரும் புதன்கிழமை நடைபெறும் மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.
இதற்கிடையில், வெள்ளம் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளதாகவும், தற்போது ஒரே ஒரு தற்காலிக நிவாரண மையம் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.








