ராணுவச் சொத்துகளைப் பயன்படுத்தி எல்லை தாண்டி போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டின் விமானப்படைத் தளங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதுவரை நாட்டின் தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி நுழைவுப் பகுதிகளில் மட்டுமே பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததாகவும், இனி அரச மலேசிய விமானப்படைத் தளங்களுக்கும் அவை உடனடியாக விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தற்காப்பு அமைச்சு முன்னின்று செயல்படுத்தும் என்றும், உள்துறை அமைச்சு ஒருங்கிணைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, சபா மற்றும் லாபுவானில் உள்ள இரண்டு விமானப்படைத் தளங்கள் வழியாக, 2024 ஆகஸ்ட் முதல் 3 டன் மெத்தாம்பெத்தமின் போதைப்பொருள் கடத்தப்பட்டதாகவும், அதன் மதிப்பு 156 மில்லியன் ரிங்கிட் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவங்களில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சைஃபுடின் தெரிவித்தார்.








